.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Wednesday, December 12, 2012

அல்லாஹ்வின் படைப்புக்களான மலக்குகள், மனிதர்கள், ஜின்கள்ஷைத்தான்கள்

அல்லாஹ் தன் விருப்பத்திற்கமைய தனது படைப்பை பற்பல நிலைகளிலும் கோணங்களிலும் படைத்துள்ளான். அவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட படைப்பினங்களை நாம் பின்வரும் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்க முடியும்
 1.     மலக்குகள்
       2.   மனிதர்கள்
       3.  ஜின்கள்
       4.  இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள்
       5.  உயிரற்ற பொருட்கள்
இங்கு நாம் மலக்குகள் பற்றி அவதானிப்போம்.


01. மலக்குகள்
மலக்என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை “மலாயிகா” என்பதாகும். மலக்என்ற சொல் அல்குர்ஆனில் பதின்மூன்று இடங்களிலும், மலகைன்என இருமையாக இரு தடவைகளும், ‘மலாயிகாஎன்று பன்மையில் எழுபத்து மூன்று விடுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். ஊண், உறக்கம் எதுவும் அற்ற இவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. இவர்களை இறைவனுக்கும் மனிதர்களுக்குமிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாக அல்லாஹ் சிருஷ்டித்துள்ளான்.
“வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம், அஹ்மத்)
மலக்குகள் எப்போது படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான். குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இது பற்றிய சரியான எந்த தகவலும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில நபிமொழிகள் காணப்பட்டாலும் அவை அறிவிப்பாளர் தொடர் பலம் குன்றியதாகவும் முன்பின் முரணான செய்திகளாகவுமே காணப்படுகின்றன. ஆயினும் மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப்பட்டவர்கள் என்பதை அல்குர்ஆனின் 2:30 வது வசனத்தின் பிரகாரம் உறுதியாகக் கூறமுடியும்.

1.1.மலக்குகளின் பண்புகள்

இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள்.  ஒருபோதும் அவனது கட்டளைகளை மீறி நடக்கவோ அல்லாஹ்வுக்கு மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள் என்ற கருத்தினை அல்குர்ஆனின் 66:6 என்ற வசனம் குறிப்பிடுகின்றது.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்என மலக்குகள் சொன்ன செய்தியினை 51:26,27 என்ற குர்ஆனிய வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து உணவை உண்ணவோ, அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.
அல்லாஹ் நேசிப்போரை நேசிப்பதும், அல்லாஹ் வெறுப்போரை வெறுப்பதுவும் இவர்களின் பண்பாகும். துர்வாடைகளால் மனிதன் வெறுப்படைவது போல் மலக்குகளும் வெறுப்படைகின்றனர். தமக்கு மேலேயுள்ள தமது இரட்சகனை அஞ்சி, தமக்கு ஏவப்படுதைச் செய்வார்கள். (16:50) தொழுகையில் நாம் ஆமீன் கூறும்போது வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர்.  நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (42:5) இறைவனுக்கு மாறு செய்வோருக்கெதிராக சாபமிடுவார்கள். (2:161) நாயும், உருவப்படமும் இருக்கும் வீட்டில் நுழையமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி) இத்தகைய பண்புள்ள இவர்கள் சுய விருப்பு வெறுப்பு இல்லாதவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர்.

1.2.மலக்குகளின் தோற்றம்
நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, தப்ரானி).
வானங்களையும் பூமியையும் படைத்தவனும், இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகளையுடைய வானவர்களைத் தூதர்களாக ஆக்கியவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (35:1)
மேற்படி அல்குர்ஆனும் ஹதீதும் வானவா்கள் வித்தியாசமான எண்ணிக்கைகளில் இறக்கைகளைக் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன. பூமியைத் தலைகீழாகப் புறட்டுமளவு சக்திமிக்கதான அவ்விறக்கைகளைக் கொண்ட அவர்கள் அழகிய தோற்றமுடையவர்களாகவும் இருக்கின்றனர். (53:5,6). எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை இரு தடவைகள் சுய உருவத்தில் கண்டுள்ளார்கள். வானத்தையும் பூமியையும் தொடுமளவு பிரமாண்டமான உருவமுடையவராக ஜிப்ரீல் (அலை) அவர்கள் காணப்பட்டதாக நபியவர்கள் குறிப்பிட்டார்கள். மனித உருவத்தில் பல தடவைகள் வானவர் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் வந்துள்ளார்கள். ஸஹாபாக்களும் கண்டுள்ளார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் திஹிய்யத்துல் கல்பி எனும் ஸஹாபியின் உருவத்தில் வருவார்கள் என்ற செய்தி அஹ்மத் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.  நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப்பிறகு எவரும் வானவர்களைப் பார்த்ததில்லை. இனி எவரும் பார்க்கவும் முடியாது. ஆயினும் மறுமையில் அவர்களைப் பார்க்கவும் பேசவும் முடியும்.

1.3. வானவர்களின் எண்ணிக்கை.

வானவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறியமாட்டார்கள். அவர்கள் எண்ணிலடங்காதவர்களாகும். “.....உமது இரட்சகனின் படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்”. (74:31) என அல்குர்ஆன் கூறுகின்றது.

வானத்திலுள்ள பைதுல் மஃமூர் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, ஒவ்வொரு நாளும் அதனுள் எழுபதினாயிரம் மலக்குகள் நுழைகின்றனர். ஒரு தடவை நுழைந்தவர்களுக்கு மீண்டும் நுழைய சந்தர்ப்பம் வழங்கப்பதில்லை எனச் சொன்னார்கள் (புகாரி, முஸ்லிம்) எனில் மலக்குகளின் எண்ணிக்கை அறிந்த ஒருவன் அவர்கள் படைத்த அல்லாஹ் மட்டுமே என்பதை தெளிவாக புரிய முடிகின்றது.

இவ்வாறு மலக்குகளின் எண்ணிக்கையை மனிதா்களாகிய நம்மால் அளவிட முடியாது என்பதை உறுதி செய்யும் ஏராளமான செய்திகளை ஹதீஸில நாம் காணலாம்.
1.4.மலக்குகளும் அவர்களது பணிகளும்
மலக்குகளுக்கு பெயர்கள் இருந்தாலும் அல்லாஹ் அறிவித்ததைத் தவிர எந்தப் பெயரும் எவருக்கும் தெரிய முடியாது. அவ்வாறே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளும் காணப்படுகின்றன.
தூதுத்துவச் செய்தியை அறிவிப்பது, மழை பொழிவிப்பது, காற்றை வீசச் செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது, நன்மை தீமைகளைப் பதிவு செய்வது, உயிரைக் கைப்பற்றுவது, மண்ணறையில் விசாரணை செய்வது, நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது, சூர் ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்ஷைச் சுமப்பது போன்றவை அவற்றுள் சில பொறுப்புகள். சதாவும் நின்று வணக்கம் புரிபவர்கள், ருகூஇல் வணங்குபவர்கள், ஏழாமல் சுஜீதிலே சிரம் பணிந்து வணக்கம் புரிபவர்கள் என அணிஅணியாக இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கும் அளவிட்டுச்சொல்லமுடியா வானவர் படையும் உள்ளனர்.
இவர்களில் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் வருமாறு,
வானவர் ஜிப்ரீல் (அலை) அர்களிடம் நபிமார்களுக்கு வஹி அறிவிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரீலின் (அலை) அவர்களது பெயர் குர்ஆனில் 2:97, 2:98, 66:4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன. ரூஹுல் குத்ஸ், ரஸூலுன் கரீம், ரூஹுல் அமீன், ஷதீதுல் குவா போன்ற சில சிறப்புப் பெயர்களும் இவர்களுக்குண்டு.
மழை, காற்றுக்கு பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று, மரம், செடி கொடிகள் முதலானவற்றுக்குப் பொறுப்பாளர் ஆவார். சூர் ஊதும் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை) ஆகும்

உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவரை சிலர் இஸ்ராயீல்என அழைக்கின்றனர். இப்பெயருக்கு அல்குர்ஆனில், நபி மொழிகளில் ஆதாரம் கிடையாது. நாம் நினைப்பது போல உயிரைக் கைப்பற்றுவதற்கு ஒரு வானவர் கிடையாது. இது தவறான கருத்தாகும். ஒவ்வொருவரின் உயிரையும் கைப்பற்றுவதற்கு நியமிக்கப்பட்ட மலக்கு உள்ளார் என்பதை அல்குர்ஆன் (32:11) தெளிவுபடுத்துகின்றது.
மனிதன் செய்யும் நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்துள்ளான். வலது பக்கம் இருப்பவர் நன்மை களையும், இடது பக்கம் இருப்பவர் தீமைகளையும் பதிவு செய்வார்கள். இவர்கள் ரகீப், அதீத் எனப்படுகின்றனர். இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும். இவர்களை கிராமன் காத்திபீன் கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்றும் அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.
கப்ரில் கேள்வி கேட்கும் மலக்குகளை முன்கர், நகீர் என நபியவர்கள் அடையாளப்படுத்தி உள்ளார்கள். அதுபோன்றே நரகத்தின் பொறுப்பாளர்களாக 19 பேர் உள்ளனர். இவர்களை ஸபானிய்யா எனப்படும். இவா்களது தலைமைப் பொறுப்பாளராக மாலிக் என்ற மலக்கு இருக்கிறார் என அல்லாஹ் கூறுகின்றான். அஃதே சுவனத்துக்கும் பொறுப்பாக மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குறித்த சில மலக்குகளின் பெயர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. இவை தவிர ஏராளமான பொறுப்புக்கள் அதிகமான மலக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மனிதனது கண்களுக்குப் புலப்படாதுள்ள இவர்களை மேற்சொன்னவாறு நம்புதல் ஈமான் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும்.
02. மனிதர்கள்
அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகச்சிறப்புமிக்க ஒரு படைப்பினம்தான் மனிதனாகும். அல்லாஹ் மண்ணைக் கொண்டு முதல் மனிதரை நேரடியாகப் படைத்தான். அவனிலிருந்து அவரது துணைவியைச் சிருஷ்டித்தான். இருவரையும் சுவனத்து சுகண்டிகளை தடையின்றி அனுபவிக்க அனுமதியிலித்த இறைவன் ஒரேயொரு கனியை மட்டும் கவர்தல் கூடாது எனத் தடைவிதித்தான். எனினும் ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகி அக்கனியைப் புசித்த அவ்விருவரும் சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். பின் இருவரிலிருந்தும் மனித இனத்தைப் பெருக்க வழிசெய்தான்.
பலவீனமாகப் படைக்கப்பட்ட மனிதன் இறை கட்டளையை மீறிக் குற்றமிழைப்பின் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோர வேண்டும். தன்னைப் போன்ற மற்றொரு மனிதனுக்கெதிராக குற்றமிழைப்பின் அதற்கான பரிகாரம் குறித்த மனிதனிடமிருந்து பெறப்பட்டாலேயேயன்றி அக்குற்றத்தை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்.
மனிதன் பிறருக்குச் சுமையாக வாழ்வதையும் இஸ்லாம் விரும்பவில்லை. தனது சக்தியைப் பயன்படுத்தி நியாயமான முறையில் சேகரித்து தனது தேவை போக மேலதிகமாக உள்ளவற்றில் அல்லாஹ் வகுத்த வழி நின்று தேவையுள்ளோருக்கு உதவ வேண்டும்.
மனிதன் தனது அனைத்து நடவடிக்கை பற்றியும் பொறுப்புக்கூற வேண்டியவனாக இருக்கின்றான். மனிதன் தனது தனித்தன்மைகளை வளர்த்து அல்லாஹ்வின் பிரதிநிதியாக உலகில் சிறப்புடன் வாழவேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. உலகைத் துறந்து வாழ்வதைத் தடைசெய்கின்ற இஸ்லாம் கட்டுப்பாடற்ற முறையில் உலகில் வாழ்வதையும் அங்கீகரிக்கவில்லை. தூய நிலையில் பிறக்கின்ற மனிதன் அந்தத் தூய்மையைப் பாதுகாத்து வாழ்வதில்தான் அவனது வெற்றி தங்கியுள்ளது.
படைத்தவனின் வரையறைகளை மனிதன் மீறும்போது அவன் பிரச்சினைக்குட்படுகின்றான். அவ்வாறான நிலைகளில் காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண முயல வேண்டும். மாறாக பிரச்சினைக்குப் பயந்து உலகை வெறுத்தல் பொருத்தமானதல்ல. இப்பூமி மனிதனுக்காகப் படைக்கப்பட்டுள்ளது. மனிதனோ அல்லாஹ்வை வழிப்பட்டுயர்வதற்கே படைக்கப்பட்டுள்ளான். என்னை வழிபடுவதற்காகவன்றி மனு ஜின்களை நான் படைக்கவில்லை என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
2.1.அல்லாஹ் மனிதனுக்கிடையிலான தொடர்பு
இஸ்லாம் என்பது இவ்வுலகில் மனிதன் சிறந்ததொரு வாழ்வை மேற்கொள்வதற்காக அவனுக்கு வழங்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாகும். அல்லாஹ் மனிதனைப் படைத்தவன். பரிபாலிப்பவன், மனிதனை பூமியில் தனது பிரதிநிதியாக ஆக்கியவன். இவ்வுலக வாழ்வு பற்றி மறுமையில் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குபவன். இவ்வாறு பல்வேறு அடிப்படையில் அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமான தொடர்பு நீண்டுள்ளது.
ஆத்மீக ரீதியாக இஸ்லாம் மனிதனுக்கும் அவனைப் படைத்தவனுக்குமிடையில் ஏற்படுத்தி உள்ள தொடர்பானது வஹி மூலம் மனிதனைச் செம்மைப்படுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது. மனிதனின் எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்தையும் அல்லாஹ் அவதானிக்கின்றான். எனவே, மனிதன் தப்புச் செய்கின்றபோது அவற்றுக்கான பிராயச்சித்தத்தை அல்லாஹ்விடம் மட்டுமே அவனால் பெற்றுக்கொள்ள முடியும்.
நன்மைக்கு நற்பேறும், தீமைக்குத் தண்டனையும் கிடைப்பது பற்றி மனிதனது மனம் அவனை உறுத்துகின்றது. இதனால் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ தீமைகள் புரிவதை அவன் தவிர்த்துக்கொள்கின்றான். அல்லாஹ் என்னை அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற தூய எண்ணம் அவனை நல்வழிப்படுத்துகின்றது. எனவே, அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையில் ஆத்மீக ரீதியான தொடர்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து வருகின்றது என்பதை உணரலாம்.
2.2.மனிதனின் சமூகத் தொடர்புகள்
இஸ்லாம் ஒரு தனிநபர் மார்க்கமல்ல. மாறாக தனிநபர் வாழ்வை மாத்திரமன்றி சமூகத்தைச் சீர்செய்து சிறப்புடன் இயங்க வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும். மனிதத் தொடர்பை இஸ்லாம் குடும்ப வாழ்க்கை, பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், விருந்தினர் என்றும் சமுதாய நிலையில் நலிவுற்றோர் என்றெல்லாம் விரிவுபடுத்துகின்றது. எனவேதான் தனிநபராக இருக்கின்ற மனிதன் குடும்ப உறுப்பினராகவும், சமுதாய உறுப்பினராகவும் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுள்ளவனாக இருக்கின்றான்.
இத்தொடர்புகள் அவனில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளை உயிர்ப்பிக்கின்றது. பிறர் உரிமைகள் பாதிக்காத வகையில் தமது உரிமைகள், கடமைகளை நிறைவேற்றல், சகோதரத்துவத்தைப் பேணல் என்பன இஸ்லாம் வலியுறுத்தும் அம்சங்களாகும். காரணம் மனிதர்களை ஒரே சமுதாயமாகவே இஸ்லாம் பார்க்கின்றது.
ஜமாஅத் தொழுகையின்போது நிற, குல, மொழி, பிரதேச வேறுபாடுகள் நோக்கப்படு வதில்லை. சிறந்த மனிதனுக்குரிய அடையாளமாக இஸ்லாம் அடையாளப்படுத்துவது அவனுள் காணப்படும் இறையச்சத்தையே. அவ்வாறே ஜமாஅத் தொழுகை மூலம் மனிதர்களை ஒன்றுகூட்டி தலைமையை ஏற்று நடத்தல், கட்டுப்படுதல் என பல பயிற்சிகள் மனிதனுக்கு வழங்கப்படுகின்றது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் பல பயிற்சிகையும் பெற்று தன் வாழ்வை உயர்த்த வேண்டிய நிலையில் அவன் உள்ளான். மனிதனிடம் காணப்படும் இழிசெயற்பாடு -களை சுட்டி ஆரம்பத்தில் மனித படைப்பு பற்றி மலக்குகள் அதிருப்தி தெரிவித்தனர். எனினும் அல்லாஹ்வோ மனிதனுள் புதைந்துள்ள நற்பண்புகளைச் சுட்டி உயர்த்தினான். அவனை இப்பூமியில் தன் பிரதிநிதியாகவும் ஆக்கி சிறப்பித்துள்ளான். இறைகட்டளைக்கு அடிபணிந்து மனித கௌரவிப்பை ஏற்க மறுத்த மனித குல விரோதியான ஷைத்தானை மறுமைவரை சபித்தான்.
எனவே, மனிதன் தன் சிறப்பறிந்து சிரம்பணிந்து வாழ்வதனூடே இவ்வுலக வாழ்க்கையைச் செழிப்பாக்குவதுடன், மறுமையின் வெற்றியையும் உறுதி செய்ய இறையன்பைப் பெற முயற்சித்தல் வேண்டும். தான் வீணாகப் படைக்கப்படவில்லை. என் எஜமானனான ரப்புல் ஆலமீனை வழிப்பட்டு நடக்கவே சிருஷ்டிக்கப்பட்டேன் என்ற தான் படைக்கப்பட்ட உயரிய நோக்கத்தை அறிந்து அதனை நிறைவேற்றுவதன் மூலம் மேற்படி இலக்குகளை அவன் அடைந்து கொள்ளலாம்.
03. ஜின்கள்
ஜின்கள் என்று ஒரு படைப்பு அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ளது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன. இங்கு இப்படைப்பு பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை அவதானிப்போம்.
ஜின் என்ற பதம் ஜன்ன எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும் ஒன்றையும் காண முடியாத இருட்டு என இதற்குக் கருத்துச் சொல்லலாம். கருவில் மறைந்திருக்கும் சிசு ஜனீன் எனப் -படுகின்றது. ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாத பைத்தியக்காரனுக்கு மஜ்னூன் என்று சொல்லப்படும். இந்த அடிப்படையிலேயே மனித கண்ணுக்கு புலப்படாத மறைமுகமான ஒரு படைப்பாக ஜின்கள் உள்ளதால் இச்சொல் அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை படைத்துவிட்டான். ஜின்களை அல்லாஹ் நெருப்பால் படைத்தான். நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான்” (55:15) என அல்குர்ஆன் இதனை உறுதி செய்கின்றது. எந்த நோக்கம் மனித படைப்பில் தொக்கி நிற்கின்றதோ அதே நோக்கமே அல்குர்ஆனில் ஜின்களின் படைப்புக்கும் சொல்லப்பட்டுள்ளது.
மனிதர்களில் நல்லவர்கள், தீயவர்கள் உள்ளது போல் ஜின் இனத்திலும் நல்லோரும், தீயோரும் உள்ளனர். ஜின்களின் உடலமைப்பு அல்லது தோற்றம் பற்றி விரிவான செய்தி எதனையும் காண முடியவில்லை. எனினும் நாய், பாம்பு வடிவங்களிலும், இறக்கைகளைக் கொண்டு காற்றில் பறந்து கொண்டும், அங்குமிங்கும் தங்கிக் கொண்டும் ஜின்கள் திரிவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி ஒன்றை முஷ்கிலுல் ஆதார் என்ற நூலில் காண முடிகின்றது.
இவர்களில் ஆண்கள் பெண்களுண்டு. திருமணம், குழந்தை பெற்றோர் என்ற உறவுகளும் இவர்களிடத்தே உண்டு. அன்பு, பரிவு, பாசம், கோபம் போன்ற மன எழுச்சிகளும் இவர்களுக்குண்டு. மனிதர்கள் உண்டு விட்டு எறியும் எலும்புகளும், கால்நடைகளின் விட்டைகளும், கரிக்கட்டைகளும் இவர்களது உணவுகளாகக் காணப்படுகின்றன. இவற்றால் துப்பரவு செய்வதை நபியவர்கள் இதனால்தான் தடுத்தார்கள். முஸ்லிம், அபூதாவுத் போன்ற நூல்களில் இந்த ஹதீஸ்களை நாம் பார்க்கலாம்.
மனிதர்களைப் போலவே பல இடங்களிலும் வாழும் ஜின்கள் புதர்களிலும், ஓடைகளிலும், மலைக் கணவாய்களிலும் அதிகமாகத் தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டுள்ளன. வானவர்களைப் போன்று மனித கண்களுக்கு புலப்படாத இவர்கள் ஏனைய விலங்கினங்கள் போனறவற்றுக்கு தோற்றமளிப்பர் என அறியலாம். “சேவல்கள் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்வின் அருளைக் கேளுங்கள். அவை வானவரைக் கண்டே கூவுகின்றன. கழுதை கத்தக் கேட்டால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். அவை ஷைத்தானைக் கண்டே கத்துகின்றன.” (புகாரி) என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மனிதர்களால் ஜின்களைக் காண முடியாது என்றாலும் நபிமார்கள் இதில் விதிவிலக்குப் பெறுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கண்டதை, ஜின்களுடன் பேசியதை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.. “நஸீபீன் என்ற இடத்தைச் சேர்ந்த ஜின்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் நல்ல ஜின்களாகவும் இருந்தனர். என்னிடம் உணவு தருமாறு கேட்டனர். எந்த எலும்பையும், கெட்டிச் சானத்தையும் அவர்கள் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஜின்கள் வலிமைமிக்க ஆற்றலுடையோராக உள்ளனர். மனிதர்களால் செய்ய முடியாத பெரும் காரியங்களை மிக எளிதாகச் செய்யும் ஆற்றல் அல்லாஹ்வால் ஜின்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட தொலைவிலுள்ள ராணியின் சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வந்து சுலைமான் (அலை) அவர்களின் முன் வைத்ததை அல்குர்ஆன் (27:40) குறிப்பிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டது போல் ஜின்களுக்கும் அவர்களே நபியாக இருக்கின்றார்கள். அல்குர்ஆன் ஜின்களுடைய வேதமாகவும் உள்ளது. அல்குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றக்கூடிய ஜின்கள் சுவர்க்கத்தையும், மாறு செய்து புறக்கணித்து வாழும் ஜின்கள் நரகத்தையும் சென்றடைவர்.
3.1. ஜின்களும் குறிகாரர்களும்
வானில் அல்லாஹ்வால் சொல்லப்படும் கட்டளைகளை ஜின்கள் ஒட்டுக் கேட்கின்றனர். கடும் போராட்டத்துக்கு மத்தியில், எறியப்படும் தீப்பிழம்புகளுக்கு இடையில் ஒருவாறு சில செய்திகள் அவர்களுக்கு கிடைத்து விடுகின்றன. இதனை அல்லாஹ் மனிதனுக்கு சோதனைக்காகவே இவ்வாறு ஆக்கி வைத்துள்ளான்.
கிடைத்த செய்தியை ஜின்கள் குறிகாரனின் உள்ளத்தில் போடுகின்றனர். அச்செய்திகளுடன் அவன் நூறு பொய்களைக் கலந்து சொல்கின்றான். அவனுக்குக் கிடைத்த ஒரு உண்மையைச் செவியேற்கும் மனிதன் பின்னால் அவன் சொல்லும் பொய்களையும் உண்மைப்படுத்தும் நிலைக்கு மாறுகின்றான். இதுவே மனிதனுக்கான சோதனையாக உள்ளது.
ஒருவன் குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதைக் கேட்டு, அதனை உண்மைப்படுத் தினால் அவனது நாற்பது நாள் தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
செய்திகளைத் திருடிச் செல்லும் ஜின்கள் இயல்பிலேயே மறைமுகமான அறிவு இல்லாத ஒரு படைப்பாகும். மறைமுகமான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானதாகும் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
சுலைமான் (அலை) அவர்களுக்குப் பயந்து பைத்துல் முகத்தஸைக் கட்டிக்கொண்டிருந்த ஜின்களுக்கு தங்களுக்கு அருகிலேயேயிருந்த அவர் மரணித்ததை அறிய முடியவில்லை. நபியவர்கள் ஊன்றிக் கொண்டு நின்ற கைத்தடியைக கறையான் அரித்து சுலைமான (அலை) அவர்கள் கீழே சாயும் வரை ஜின்களால் நபியின் மரணத்தை அறிய முடியவில்லை.
எனவே, ஜின்களால் நடந்து முடிந்தவைகளைத்தான் தெரிந்து கொள்ள முடியுமே தவிர மறைமுக ஞானமோ, மனிதனது எதிர்காலம் பற்றிச் சொல்லும் ஆற்றலோ கிடையாது என்பதை நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
3.2. ஜின்களை வசப்படுத்தல்
ஜின்களை வசப்படுத்தி மனிதன் பல செயல்களையும் சாதிக்கலாம் என்ற தவறான நம்பிக்கை மனிதர்களிடம் காணப்படுகின்றது. இதனால்தான் இன்று பல்வேறுபட்ட நிலைகளில் மனிதன் ஏமாற்றப்படுகின்றான். ஜின்களைப் பொறுத்தவரை அவர்கள் பகுத்தறிவுள்ள ஒரு படைப்பாகும். வலுவில் குறைந்த ஒரு மனிதனுக்கு தன்னைப் போன்று பகுத்தறிவுள்ள, தன்னை விட பலமடங்கு பலமிக்க ஜின்களை வசப்படுத்தல் என்பது சாத்தியமில்லாத ஒரு விடயமாகும். இந்நிலையில் இவ்வாறு நம்புவது எவ்வளவு மடமை என்பதை நாம் உணர வேண்டும்.
ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்படாத ஒன்றாக இருப்பினும் அல்லாஹ் தன் தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கு இதைச் சாத்தியப்படுத்திக் கொடுத்தான். இதை சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமுரிய தனிச்சிறப்பாகவும் ஆக்கி வைத்துள்ளான். உலகிலேயே சிறந்த மனிதனாக விளங்கும் மாமனிதர் நபி (ஸல்) அவர்களுக்கே இது சாத்தியமாக்கிக் கொடுக்கப்படவில்லை.

தொழுகையைக் குழப்பிய ஜின்னை நபி (ஸல்) அவர்கள் பிடித்து பள்ளிவாசல் தூணில் கட்டிப்போட நினைத்தாலும், சுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனையால் அதைத் தான் செய்யவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரி போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்தல், மனித உயிர்களைப் பறித்தல், வறுமையை ஏற்படுத்தல் போன்ற எந்தத் தீங்கையும் ஜின்கள் ஏற்படுத்துவதில்லை. எனினும் உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகெடுப்பது போன்ற செயற்பாடுகளை மனிதனளவில் கெட்ட ஜின்கள் செய்கின்றன.
04. ஷைத்தான்
ஷைத்தான் என்பவன் தனியானதொரு படைப்புக் கிடையாது. மாறாக அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாவான். ஜின்களில் மிக உயர்ந்த அந்தஸ்தையுடையவனாகவும் அவன் இருந்தான். அதனால்தான் மலக்குகளுடன் வானுலகில் இருக்கும் பேற்றை அவன் பெற்றிருந்தான்.


நாம் வானவர்களிடம் ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள் என்று கூறியபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சுஜூது செய்தனர். அவன் ஜின்களைச் சேர்ந்தவனாக இருந்தான்…” (18:50) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

வானவர்களுடன் சிறப்புப்பெற்று வானுலகில் இருந்த ஷைத்தான் பெருமையினால் இறை கட்டளையை மறுத்ததனால் சிறுமைப்படுத்தப்பட்டான். அல்லாஹ்வின் சாபத்துக்கும் கோபத்துக்கும் இலக்கானான். அதனால் அங்கிருந்து அவன் தூக்கி வீசப்பட்டான். அன்று தொட்டு மனிதர்களை வழிகெடுப்பதாக அவன் சபதம் செய்தான் என்பதை அல்குர்ஆன் விபரிக்கின்றது.

ஷைத்தானின் தோற்றம் அருவருப்பானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். பாவம் செய்தோரின் உணவாக நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகிய ஸக்கூம் என்ற மரத்தின் பழக்குலைகளை ஷைத்தான்களின் தலை போன்று என்று அல்லாஹ் (37:64,65) கூறுவதிலிருந்து இதனை நாம் அறிய முடிகின்றது.

மேலும், ஷைத்தான்களுக்கு இரு கொம்புகள் உள்ளன என்பதை நபியவர்கள் கூற்றிலிருந்து அறிய முடிகின்றது. “சூரியன் உதிக்கும் போதும், மறையும்போதும் தொழாதீர்கள். ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையில்தான் உதிக்கிறது.” (புகாரி) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் இவனது உணவு ஜின்களின் உணவிலிருந்து வேறுபடுகின்றது. அவ்வாறே இவனது வசிப்பிடமும் வித்தியாசமானவையாகும். தனக்கென சிம்மாசனம் அமைத்து பெரும் சந்ததியினரைக் கொண்டுள்ள அவன் உலகம் அழியும் வரை உயிர்வாழும் வரம் பெற்றுள்ளான்.
அல்லாஹ்வின் பெயர் கூறி அதாவது பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ணப்படாத உணவில் ஷைத்தானும் உண்ணுகின்றான். பிஸ்மில்லாஹ் சொல்லப்படாது மனிதர்கள் பருகும் பானத்திலும் அவன் குடிக்கின்றான். வீட்டில் நுழையும் போது இறைநாமம் கூறாது நுழைந்தால் உடன் ஷைத்தானும் நுழைந்து அங்கே தங்கி விடுகின்றான்.

ஒருவர் உணவு உண்ணும்போதும், வீட்டில் நுழையும்போதும் அல்லாஹ்வின் பெயர் கூறினால், இன்று தங்குமிடமோ, உணவோ இங்கு நமக்கில்லை என ஷைத்தான் தன் கூட்டத்தாரை நோக்கிச் சொல்கின்றான். அல்லாஹ்வின் பெயர் கூறாது விட்டால், தங்குமிடமும், உணவும் கிடைத்துவிட்டதாக தன் கூட்டத்தாருக்குச் சொல்கின்றான்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அசுத்தமான இடங்கள் குறிப்பாக கழிவறைகள் ஷைத்தானின் தங்குமிடங்களில் உள்ளவை ஆகும். எனவேதான் மலசல கூடத்துள் நுழையும் போது ஆண், பெண் ஷைத்தான்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிய நிலையில் நுழையுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்து, அதனடிப்படையில் பிரார்த்தனை ஒன்றையும் கற்றுத் தந்துள்ளார்கள். (புகாரி)

மனிதர்களுக்கு தீயதை நல்லதாகக் காட்டி, அவர்களது உள்ளங்களிலே தீய எண்ணங்களை உருவாக்குகின்றான். வெட்கக் கேடான கருமங்களை ஏவுவான். மது, சூதாட்டம் போன்றவற்றின் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகின்றான். அல்லாஹ்வின் நினைவு மற்றும் தொழுகையை விட்டும் மனிதனைத் தடுக்கின்றான். இவ்வாறான செயற்பாடுகளில் சதாவும் முழுமூச்சாக ஷைத்தான் செயற்படுவதாக அல்குர்ஆனிய வசனங்கள் குறிப்பிடுகின்றன.

இவனது இத்தகைய செயற்பாடுகளிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறை       -களை இஸ்லாம் காட்டியுள்ளது. அல்லாஹ்விடம் இவனது தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுதல், வீடுகளில் அல்குர்ஆனை ஓதுதல், சுன்னத்தான தொழுகைகளைத் தொழுதல், அவ்வப்போது சந்தர்ப்ப துஆக்களை ஓதிக்கொள்ளல், உண்ணும்போதும், பருகும்போதும், வீட்டில் நுழையும்போதும் பிஸ்மில்லாஹ் என்று கூறல் போன்ற நடைமுறைகளை நாம் சரியாகக் கையாண்டால் ஷைத்தான்களால் நம்மை வழிகெடுக்க முடியாது. இதனை நாம் அல்குர்ஆன், அல்ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts