.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Friday, August 23, 2013


S.H.M. இஸ்மாயில் ஸலஃபி                                           

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நவீன தவ்ஹீத்வாதிகள்,  சுலைமான் நபி அவர்கள் தொடர்பாக வரும் ஹதீஸில்  எழுப்பும் மற்றுமொரு (திக) பகுத்தரிவு கேள்வி யாதெனில்,

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்கள், 'நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்'' என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்றார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறிவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். 
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்' என்று கூறியிருந்தால் அவர் தம் சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), ஆதாரம்: புஹாரி 5242. 

தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) போராடுவார்கள் என்று சுலைமான் நபி எப்படிக் கூறுவார்? அவருக்கு மறைவான ஞானம் இருக்கிறதா? சுலைமான் நபி இப்படிக் கூறியதாக நம்பினால் அவருக்கு மறைவான அறிவு இருப்பதாக நம்பியதாக ஆகிவிடுமல்லவா? என இவர்களால் எதிர்வாதம் செய்யப்படுகின்றது.
   
அல்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்
 'நூஹ் நபி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது, இந்தக் காபிர்களை விட்டு வைக்காதே! இவர்களை நீ விட்டு வைத்தால் இவர்கள் காபிர்களையும் பாவிகளையும்தான் பெற்றெடுப்பார்கள். முஃமினான உனது அடியார்களை வழிகெடுப்பர்ர்கள்.' (அல்குர்ஆன் 71:27-28) என்று பிரார்த்தித்தார்கள்.

காபிர்களையும் பாவிகளையும் இவர்கள் பெற்றெடுப்பார்கள் என்று நூஹ் நபி எப்படிக் கூறுவார்? அவருக்கு மறைவான அறிவு இருக்கிறதா?

ஹிழ்ர்((அலை) அவர்கள் ஒரு சிறுவனைக் கொலை செய்கிறார்கள். அதற்குக் காரணம் கூறும் போது இவன் வளர்ந்து பெற்றோர்களை நோவினை செய்வான். குப்ரைச் செய்யுமாறு நிர்ப்பந்திப்பான் (18:80-81) என்று காரணம் கூறினார்கள்.

எதிர் காலத்தில் இவன் பெற்றோர்களை நோவினை செய்வான், குப்ரை செய்யுமாறு நிர்ப்பந்திப்பான் என்பது ஹிழ்ர்((அலை) அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவருக்கு மறைவான அறிவு உண்டா? எனக் கேட்டால் 'இல்லை'. அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில்தான் அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்பதுதான் பதிலாகும்.

இதே போல சுலைமான் நபிக்கும் அல்லாஹ் வஹீ மூலம் எப்படியோ உணர்த்தியதன் அடிப்படையில் தனக்கு ஆண் குழந்தைகள் கிடைப்பார்கள், அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுவார்கள் என்று கூறியிருக்கலாமல்லவா? என்று நாம் கேள்வி எழுப்பலாம். இவ்வாறு கேள்வி எழுப்பும் போது அவர்கள் இப்படி எதிர் வாதமும் செய்யலாம்.

இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத்தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத்தான் மேற்படி ஹதீஸிலிருந்து பெற முடியும்.  இந்த விளக்கம் கேலிக் கூத்தானதாகும்.

நமது விளக்கம்:

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது வலுவான வாதம் போல் தென்படலாம். ஆனால் நாம் கூறிய நூஹ் நபி, ஹிழ்ர் நபி ஆகிய இருவரின் சம்பவங்களுடனும் இந்த வாதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வாதத்தின் ஓட்டை உடைசல் பளிச்செனத் தெரியும்.

அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் சுலைமான் நபி சொல்லியிருந்தால் அவர் சொன்னபடி குழந்தைகள் பிறந்து இறை வழியில் போராடியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சசையாகவே கூறினார்கள் என்று வாதிக்கின்றனர்.

இதோ நூஹ் நபியின் பிரார்த்தனையைப் பாருங்கள்!

'காபிர்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தைகள் காபிர்களாகவும் பாவிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்ற முஃமின்களையும் வழிகெடுப்பார்கள்.'

இவ்வளவு செய்தியையும் நூஹ் நபி அல்லாஹ்வின் வஹீ மூலம் அறிந்தே கூறினார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று அல்லாஹ் கூறியபடி நடந்ததா என்றால் இல்லை என்பதே பதிலாகும். நூஹ் நபியின் பிரார்த்தனைப்படி அவர்கள் வெள்ளப் பிரளயத்தால் அழிக்கப்பட்டார்கள்.

நூஹ் நபி சொன்னபடி அதாவது, அல்லாஹ் அறிவித்து நூஹ் நபி சொன்னபடி நடக்கவில்லை. இதை வைத்து நூஹ் நபி தன்னிச்சைப்படிதான் இவர்கள் காபிர்களையும் பாவிகளையும் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள் எனக் கூற முடியுமா? அப்படிக் கூறினால் நூஹ் நபிக்கு மறைவான அறிவு இருப்பதாக நம்ப வேண்டிய நிலை ஏற்படுமல்லவா?

இவ்வாறே ஒரு சிறுவனைக் குறித்து இந்தச் சிறுவன் தனது பெற்றோர்களை இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் தள்ளிவிடுவான் என ஹிழ்ர் நபி கூறினார்கள். அல்லாஹ் விடமிருந்து அறிவிப்பைப் பெற்றே அப்படிக் கூறினார்கள். ஆனால் அந்த இளைஞன் பெற்றோரைக் குஃப்ரில் தள்ளவில்லை. ஏனெனில் ஹிழ்ர் நபி அந்தச் சிறுவனைக் கொன்றுவிட்டார்கள். இப்போது அல்லாஹ்வின் அறிவிப்பைப் பெற்று ஹிழ்ர் நபி கூறியது நடக்கவில்லை. எனவே, ஹிழ்ர் நபி இக் கூற்றை தன்னிச்சையாகக் கூறினார்கள் என்று கூற முடியுமா? அப்படிக் கூறினால் ஹிழ்ர் நபிக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்ப நேரிடும் அல்லவா?

எனவே, சுலைமான் நபி சொன்னபடி நடக்கவில்லை. எனவே, சுலைமான் நபி தன்னிச்சைப்படிதான் இந்த செய்திகளைக் கூறினார்கள் என வாதிப்பது தவறானதாகும்.

இந்த தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பதென்றால் இதே வாதத்தின் அடிப்படையில் நூஹ் நபியின் பிரார்த்தனை, ஹிழ்ர் நபியின் கொலை சம்பந்தமாக குர்ஆன் கூறும் செய்திகளையும் மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, ஹதீஸை மறுத்து இறுதியில் குர்ஆனையும் மறுத்து குஃப்ரில் மூழ்கிவிடாமல் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புபவர்கள் இத்தகைய தடம்புரண்டவர்களின் தப்பான வாதங்களுக்கு காது கொடுக்காமல் இருப்பதுதான் நல்லது.

அழிக்கப்படும் கழாகத்ர்

'அல்லாஹ் (அதில்) நாடுவதை அழிக்க வும், நிலைக்கவும் செய்கின்றான். 'உம்முல் கிதாப்' (எனும் தாய் ஏடு) அவனிடமே இருக்கின்றது.' (அல்குர்ஆன் 13:39)

இந்த வசனத்தின் முன்-பின் வசனங்களைப் பார்த்தால் இது கழாகத்ர் பற்றித்தான் பேசுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். விதி எழுதப்பட்ட ஏட்டில் 'உம்முல் கிதாப்' என்ற ஒரு பகுதி உள்ளது. அது மாற்றப்படமாட்டாது. அது அல்லாததில் மாற்றம் ஏற்படலாம். இதையே இந்த வசனம் கூறுகின்றது.

சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால் அவர் நினைத்தபடி குழந்தைகள் பிறந்து இறை வழியில் போராடி இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்து அவர் அல்லாஹ்வின் வஹியைப் பெற்றுத்தான் அப்படிக் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இன்ஷh அல்லாஹ் கூறினால்தான் அதனை அடைவார். இல்லாவிட்டால் அதனை இழந்துவிடுவார் என்பது அல்லாஹ்வின் நாட்டமாக உள்ளது. அவர் கூறாததால் அல்லாஹ் அதை அழித்துவிட்டான் என்பது மேலே கூறிய குர்ஆன் வசனத்திற்கு உட்பட்டதுதான். இதில் மறுப்பதற்கும் குதர்க்க வாதம் புரிவதற்கும் எதுவும் இல்லை.

'செல்வ வளம் தனக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும் என ஒருவர் விரும்பினால் அவர் தனது குடும்ப உறவுகளைச் சேர்ந்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' 
(அறிவிப்பவர்: அனஸ்(ரழி), 
ஆதாரம்: புஹாரி - 2067, 5985, 5986, 1961, 5639, முஸ்லிம்: 2557, 6687)

ஒருவர் குடும்ப உறவை சேர்ந்து நடந்தால் இப்படி பிரிந்து நடந்தால் இப்படி என இரண்டு விதங்களில் விதி அமைந்திருக்கும். சேர்ந்து நடப்பாரா? பிரிந்து நடப்பாரா? என்பது உம்முல் கிதாபில் பதியப்பட்டிருக்கும். அதில் எதுவும் அழிக்கப்படமாட்டாது. ஆனால் உம்முல் கிதாபில் இல்லாததை அல்லாஹ் அழிப்பான். இது போல் சுலைமான் நபி இன்ஷh அல்லாஹ் கூறாததால் அவரது நாட்டம் அழிக்கப்பட்டு விட்டது. ஹிழ்ர் நபி கொலை செய்த சிறுவன் இருந்தால் பெற்றோரை வழிகெடுப்பான். அவன் கொல்லப்பட்டுவிட்டதால் வழிகெடுப்பான் என்பது அழிக்கப்பட்டுவிட்டது. நூஹ் நபியின் சமூகம் காபிர்களையும் பாவிகளையும் (உயிருடன் இருந்திருந்தால்) பெற்றெடுத்திருப்பார்கள். நூஹ் நபியின் பிரார்த்தனையின் படி அவர்கள் அழிக்கப்பட்டு விட்டதால் அவர்கள் சம்பந்தப்பட்ட விதியும் அழிக்கப்பட்டுவிட்டது என எடுத்துக் கொண்டால் ஒரு பிரச்சினையும் எழாது.

'இஸ்ரவேலர்கள் இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது..... என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)        ஆதாம்: புஹாரி: 3330, 3399

இஸ்மாயில் நபியின் தாயார், '(அன்னை ஹாஜராவுக்கு) அல்லாஹ் அருள் புரியட்டும். அவர்கள் மட்டும் அவசரப் பட்டிருக்காவிட்டால் 'zஸம்zஸம்' (பூமியின் மேற்பரப்பில்) ஓடிக்கொண்டிருக்கும் ஓர் நீரூற்றாக ஆகியிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி)              ஆதாரம்: புஹாரி: 3362

இது போன்ற ஹதீஸ்களை எப்படி விளங்குகின்றோமோ, அதே போல சுலைமான் நபியும் சம்பந்தப்பட்ட ஹதீஸையும் அழகாக விளங்கலாம்.

அன்னை ஹாஜரா அவர்கள் அவசரப்பட்டிருக்காவிட்டால் 'zஸம்zஸம்' ஆறாக ஓடியிருக்கும். அவசரப்பட்டு விட்டார்கள். எனவே, ஆறாக ஓடுதல் என்பது அழிக்கப்பட்டு விட்டது.

இஸ்ரவேலர்கள் தமக்கு இடப்பட்ட கட்டளையை மீறி இறைச்சியைச் சேமித்துச் வைக்காது இருந்திருந்தால் இறைச்சி கெட்டுப் போகாத தன்மையைப் பெற்றிருக்கும். அவர்கள் சேர்த்து வைத்ததால் அந்த விதி அழிக்கப்பட்டுவிட்டது.

சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் சொல்லியிருந்தால் போராடும் குழந்தைகளைப் பெற்றிருப்பார். சொல்லத் தவறியதால் அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டார். அவ்வளவுதான்!

(((தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) போராடுவார்கள் என்று சுலைமான் நபி எப்படிக் கூறுவார்? அவருக்கு மறைவான ஞானம் இருக்கிறதா? சுலைமான் நபி இப்படிக் கூறியதாக நம்பினால் அவருக்கு மறைவான அறிவு இருப்பதாக நம்பியதாக ஆகிவிடுமல்லவா?))) என நீங்கள்தான் கூறுகின்றீர்களே தவிர, நல்லவிதமான மார்க்கஅறிவு பெற்ற எவரும் இப்படி நம்பமாட்டார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்!

0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts